

ஆத்தூர் அருகே வெவ்வேறு விபத்தில் தேமுதிக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
தலைவாசல் அடுத்த தியாகனூர் பகுதியைச் சேர்ந்தவர் தேமுதிக மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் (38). நாவக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (44). கட்டிடத் தொழிலாளியான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஆர்த்தி அகரம் சாலையில் உள்ள கடையில் கம்மங்கூழ் குடித்து விட்டு சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது, வீரகனூரில் இருந்து தலைவாசல் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக செந்தில்குமார், தமிழ்செல்வன் மீது மோதியது. இதில், செந்தில்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தமிழ்செல்வன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தலைவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைவாசல் அடுத்த காமக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (55). விவசாயியான இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் தலைவாசல் தினசரி சந்தையில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ஆர்த்தி அகரம் பிரிவு சாலை அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில்,முத்துசாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக தலைவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.