

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.1.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக அரசியல் கட்சியினர் மீது 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க 1950 என்ற ஹெல்ப் லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு நேற்று காலை வரை மொத்தம் 2,076 அழைப்புகள் வந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 அழைப்புகள் வந்துள்ளன. இந்த அழைப்புகளில் தெரிவிக்கப்பட்ட அனைத்து புகார்களும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 551 அழைப்புகளும், கோவில்பட்டி தொகுதியில் 438 அழைப்புகளும் வந்துள்ளன.
மாவட்டத்தில் வாக்காளர் களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க 6 தொகுதிகளிலும் பறக்கும் படை குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் நேற்று காலை 6 மணி வரை மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 101 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் மூலம் ரூ.7,210 மதிப்பிலான மதுபான பாட்டில்களும், காவல் துறை மதுவிலக்கு அமலாக்கத் துறை மூலம் ரூ.92,100 மதிப்பிலான மதுபான பாட்டில்களும், ரூ. 1,37,750 மதிப்பிலான போதைப் பொருட்களும், ரூ.2,35,642 மதிப் பிலான பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக 6 தொகுதிகளிலும் இதுவரை 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிமுக மீது 23 வழக்குகள், திமுக மீது 31, பாஜக மீது 5 , காங்கிரஸ் மீது 11 , அமமுக மீது 21 , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.