

பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு செயல்முறை பயிற்சி கிருஷ்ணகிரியில் நடந்தது.
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற்றது.
பயிற்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் முன்னிலை வகித்தார். பயிற்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் தலைமை வகித்து பேசியதாவது:
பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி வாக்குச் சீட்டு ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி களில் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி 100 சதவீதம் வாக்களிக்க அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சியில், பார்வைற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.