ஈரோடு ரயில்வே பணிமனையில் - விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி :
ஈரோடு ரயில்வே பணிமனையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
இதற்காக ஈரோடு ரயில்வே பணிமனையில் உள்ள தண்டவாளத்தில் இரண்டு ரயில் பெட்டிகளை கவிழ்த்து, அதில் சிலர் சிக்கியது போன்றும், அவர்களை மீட்புக் குழுவினர் நவீன இயந்திரங்கள் உதவியுடன் உயிரோடு மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அரக்கோணத்தில் இருந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
விபத்து காட்சிகளை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில், விபத்தில் சிக்கிய பயணிகள் அலறுவது போன்றும், ரயில்வே மீட்புக் குழுவினர் நவீன இயந்திரங்கள் மூலம், ரயில் பெட்டியை துளையிட்டும், ஜன்னல் கம்பிகளை அறுத்தும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய பயணிகளை மீட்கும் ஒத்திகைக் காட்சிகள் நடந்தன. அதன்பின்னர், பயணிகள் மருத்துவக் குழுவிடம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது குறித்த காட்சிகளும் நடந்தன.
சேலம் கோட்ட உதவி மேலாளர் அண்ணாதுரை, ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஒத்திகை நிகழ்வைப் பார்வை யிட்டனர்.
