

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்கப்படும் என சூளகிரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், பர்கூர் மதியழகன், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் ஒய்.பிரகாஷ் மற்றும் ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம், தளி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து சூளகிரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி, தேன்கனிக் கோட்டை, ராயக்கோட்டையில் குளிர்பதனக் கிடங்குகள், ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை தரம் உயர்வு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங் கரையில் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். போச்சம் பள்ளியில் பூக்கள் ஏற்றுமதி மையம். சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கப்படும். ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓசூரில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தங்குவதற்கு தனித்தனியாக விடுதி வசதி ஏற்படுத்தித் தரப்படும். பர்கூரில் கலைக் கல்லூரி மற்றும் ஜவுளிப் பூங்கா உருவாக்கப்படும்.
கிருஷ்ணகிரியில் நறுமண தொழிற்சாலை, மாங்கூழ் தொழிற்சாலை, வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து உபரி நீர் ஓசூர், வேப்பனப்பள்ளியில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உட்பட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சி அமைந்தவுடன் 5 ஆண்டுகளில் நிறைவேற்றித் தரப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.