

அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப் படிப்பை முடித்த பட்டதாரிகள் வழக்கறிஞராக பணியாற்ற அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் (ஏஐபிஇ) வெற்றிபெற வேண்டும். ஏஐபிஇ தேர்வை இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஏஐபிஇ - 15 தேர்வு கடந்த ஜனவரி 24-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் 3-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்வுக்கான முடிவுகள் வெளியிடும் நடைமுறை ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஏஐபிஇ அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 4-வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்வு முடிவுகளை https://allindiabarexamination.com/ என்ற இணையதளத்தில் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதள தொழில்நுட்ப கோளாறால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.