

தஞ்சாவூரில் 2 இடங்களில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரின் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.55 கோடி வங்கிப் பணம், உரிய விசாரணைக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மேலவீதி பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தபோது, தனியார் நிதி நிறுவன ஊழியர்களான அவர்கள் ரூ.16 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததும், மக்களிடம் வசூலான பணத்தை தனியார் வங்கியில் டெபாசிட் செய்ய எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தினர்.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே திருவையாறு சாலையில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் வள்ளிநாயகம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.2.35 கோடி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், தஞ்சாவூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்திலிருந்து, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 10 வங்கிக் கிளைகளுக்கு இந்தப் பணம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்கள் இருந்தபோதும், கூடுதலாக பணம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பணத்துடன் டெம்போ வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உரிய விசாரணை நடத்தப்பட்டு, அனைத்தும் முறையாக இருப்பது தெரியவந்ததால், பணத்துடன் வேன் விடுவிக்கப்பட்டது.
அதேபோல, வல்லத்தில் பறக்கும்படை அலுவலர் சுமதி தலைமையிலான குழுவினரின் வாகன சோதனையின்போது, ஒரு வேனில் ரூ.4.20 கோடி கொண்டுசெல்லப்படுவது கண்டறியப்பட்டது.
திருச்சியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்திலிருந்து இந்தப் பணம் கொண்டு செல்லப்படுவது விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், அதற்குரிய ஆவணங்களில் இருந்த பார்கோடு சரியாக ஸ்கேன் ஆகாததால், பணத்துடன் வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுசென்றனர். ஆய்வுக்குபின், பணத்துடன் வேன் விடுவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி பறக்கும் படையினர், அறந்தாங்கி அருகே எரிச்சியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்த வியாபாரி கனகரத்தினம் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கரூர் வாங்கல் காவல் நிலையம் அருகே, தமிழ்ச்செல்வி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாகச் சென்ற நாமக்கல் மாவட்டம் அரியூரைச் சேர்ந்த தனியார் முட்டை பண்ணைக்கு சொந்தமான லாரியில், அர்ஜூனன் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.5,51,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, பிரகாஷ் தலைமையிலான அரவக்குறிச்சி தொகுதி நிலையான கண்காணிப்புக் குழுவினர், கரூர் பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த விவேக் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.2,60,250-ஐ பறிமுதல் செய்தனர்.