Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை : மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கிள்ளியூர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதியளித்தார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் நேற்று கிள்ளியூர் தொகுதி காங்கிஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுடன் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். ஊரம்பு பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் சூழால், கோழிவிளை, அடைக்காகுழி, படந்தாலுமூடு, சூரியகோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது, விஜய்வசந்த் பேசியதாவது:

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், வரும் தேர்தலில் கை சின்னத்தில் எங்கள் இருவருக்கும் வாக்களியுங்கள். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இத்தேர்தலின் மூலம் முதல்வராக வருவார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் உழைப்போம். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். கடற்கரை கிராமங்களில் கடல் நீர் உட்புகும் இடங்களில் எல்லாம் கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரச்சாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறுகையில்; கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சிறந்த காங்கிரஸ் நிர்வாகியான வசந்தகுமாரின் இடத்துக்கு, அவரது மகன் விஜய் வசந்தை தேர்வு செய்யும் வகையில் அனைத்து தரப்பினரும் வாக்களித்து அவரை எம்.பி. ஆக்குங்கள் என்றார்.

திமுக ஒன்றியச் செயலாளர் மனோன்மணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செல்லசாமி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x