

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் பஸ்தலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முடுப்பிநாயக்கன்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியி ருப்புகளில் 500-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்துக்குச் செல்ல பஸ் தலப்பள்ளி திம்மராய சுவாமி கோயிலில் இருந்து ஒன்றரை கிமீ துாரத்துக்கு வழித்தடம் உள்ளது. இதையடுத்து சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அவசர நேரங்களில் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதால், இக்கிராமத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 80-க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை யைத் திரும்பக் கொடுத்தனர்.
இதனை வாங்க அலுவலர்கள் மறுத்ததால், வட்டாட்சியர் அலுவலக வாயிலில் துண்டை விரித்து அதில் வாக்காளர் அடையாள அட்டைகளைப் போட்டனர். பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதால் சமாதானம் அடைந்த மக்கள் கலைந்து சென்றனர். மேலும், சாலை வசதிக்கு உடனடியாக ஏற்பாடு செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிப்பது உறுதி என கிராம மக்கள் தெரிவித்தனர்.