

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மேலவீதி மூல அனுமார் கோயில் பகுதியில் பறக்கும் படை அலுவலர் சுமதி தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வடக்கு அலங்கம் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ரகுநாதன்(40) உள்ளிட்ட 2 பேரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவர்களிடம் 40 வாக்காளர்களின் அடையாள அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தஞ்சாவூர் வடக்கு அலங்கம் கோட்டைப் பகுதியில் இருந்த வீடுகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத் துக்காக அகற்றப்பட்டன. இத னால், அங்கு வசித்தவர்களில் பலர் பிள்ளையார்பட்டி பகுதிக் கும், வெளியூர்களுக்கும் சென்று விட்டனர். ஆனால், அவர்கள் தங்களின் பழைய முகவரியிலி ருந்து விண்ணப்பித்திருந்த வாக் காளர் அடையாள அட்டைகள் தற் போது வந்திருந்தன. அவற்றை அப்பகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலர் ஒருவர், ரகுநாதனிடம் மொத்தமாகக் கொடுத்து, சம்பந் தப்பட்ட வாக்காளர்களிடம் ஒப் படைக்குமாறு கூறியுள்ளார். அந்த அடையாள அட்டைகள்தான் தற்போது பறிமுதல் செய்யப் பட்டுள்ளன” என்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் கேட்டபோது, “வாக்காளர்களுக்கு நேரில் மட்டுமே அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். ஆனால், தனிப்பட்ட அரசியல் கட்சியிடம் அடையாள அட்டைகளை வாக்குச்சாவடி நிலைய அலுவலர் ஒப்படைத்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.