

வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர்கள் பல்சானா (ஊத்தங்கரை, பர்கூர் தொகுதி), பார்த்தசாரதி (கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதி), ஹன்ஸ்ராஜ் சுஹான் (ஓசூர், தளி தொகுதி), காவல்துறை பார்வையாளர் சுனில் பாஸ்கர், செலவின பார்வையாளர்கள் சுவன்தாஸ் குப்தா, கல்யாணம், பாலகிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்களிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக பார்வையாளர்கள் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் பார்வையாளர்கள் பேசியதாவது:
தேர்தல் பணிகள் மேற் கொள்வதில் சிரமங்கள் இருந்தால் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள், அனைத்து பணியாளர்களும் இணைந்து தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் பார்வையாளர்கள் பேசினர்.
ஆய்வுக் கூட்டத்தில் எஸ்பி பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், தேசிய நெடுஞ்சாலை பெங்களுரு செயற்கைகோள் நகர்ப்புற வளைவு சாலை (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.