

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட 194 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு பரி சீலனை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், கூடுதலாக அளிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் உரிய தகவல்கள் அளிக்காத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்படி ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 21 மனுக் களில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 15 பேரின் மனுக் கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பர்கூர் தொகுதியில் 30 மனுக் களில், 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. கிருஷ்ணகிரி தொகுதியில் 28 மனுக்களில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிட 36 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஓசூர் தொகுதியில் தாக்கலான 27 மனுக்களில் 7 தள்ளுபடி செய்யப்பட்டு, 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தளி தொகுதியில் 17 மனுக்களில் 3 தள்ளுபடி செய்யப்பட்டு 14 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 159 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டதில், பரிசீலனையின் போது 57 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. 102 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. பாலக்கோடு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 33 வேட்புமனுக்களில், பரிசீலனை யின்போது 20 வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட 13 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பென்னாகரம் தொகுதியில் 33 மனுக்களில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தருமபுரி தொகுதியில் அளிக்கப்பட்டிருந்த 35 மனுக்களில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 24 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அளிக்கப்பட்டிருந்த 32 மனுக்களில் 10 நிராகரிக்கப்பட்ட நிலையில் 22 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அரூர் தொகுதியில் அளிக்கப்பட்டிருந்த 22 மனுக்களில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 15 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் சேர்த்து 155 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் 63 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 92 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 5 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக, மநீம உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரது மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.