ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவா? : தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனம்
ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவுள்ளதாகக் கூறி தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த ஒரு தீர்மானம் மார்ச் 22-ல்(நாளை) விவாதத்துக்கு வரப்போகிறது.
47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 46-வது கூட்டத்தில் வரவுள்ள, ‘இலங்கையின் மனித உரிமை மீறல்கள்' தொடர்பான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காது எனவும், இலங்கை அரசைதான் இந்தியா ஆதரிக்கப் போகிறது என்று உறுதி கூறிவிட்டதாகவும், இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இழைக்க உள்ள இந்த அநீதியை தமிழ்த் தேசிய பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டிக்காமல் இருப்பது ஏன்?. மனித உரிமை நீதியின் பக்கம் இந்திய அரசை திசை திருப்ப அனைத்துக் கட்சிகளும் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
