

சூளகிரி அருகே கார் மீது பார்சல் லாரி மோதிய விபத்தில் கணினி பொறியாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அப்போது, சிக்னல் கம்பம் சாய்ந்ததில்வடமாநில கூலித் தொழிலாளியும் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ரெட்டி மகன் நந்தீஷ் ரெட்டி (27). கணினி பொறியாளர். இவர் அமெரிக்காவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இவர், தனது நண்பர்கள் மற்றும் தம்பி சேசாங் ரெட்டி(25) உட்பட 6 பேருடன், கேளிக்கை கொண்டாட்டத்துக்காக நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு காரில் புறப்பட்டார். காரை நந்தீஷ் ரெட்டி ஓட்டி வந்தார். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பள்ளம் அருகே நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக முன்னால் பார்சல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பார்சல் லாரி, சென்டர் மீடியனைத் தாண்டி எதிர் சாலைக்கு வந்தது. அங்கு வளைவில் இருந்த சிக்னல் கம்பம் மீதும், கார் மீதும் மோதி நின்றது.
இதில் சிக்னல் கம்பம் விழுந்ததில், சாலையைக் கடக்க முயற்சி செய்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ரூபேஷ் ராவுத்(34) என்பவர் உயிரிழந்தார். மேலும், காரில் படுகாயங்களுடன் இருந்த நந்தீஷ் ரெட்டி, சேசாங் ரெட்டி ஆகியோர் சிகிச்சைக் காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள் ளனர். இவ்விபத்து குறித்து சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.