Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் - வீடு, நிலம் இல்லாதோருக்கு கான்கிரீட் வீடு : தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி

அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியதாவது:

அதிமுக அரசைப் பற்றி ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி, மக்களைக் குழப்பி வருகிறார். காவிரிப் பிரச்சினையை தான் தீர்த்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஜெயலலிதா அரசுதான் காவிரி பிரச்சினையைத் தீர்த்தது.

ஆட்சியில் இருக்கும்போது விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்தது திமுக. காங்கிரஸ் ஆட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது அரசிதழில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிட்டிருந்தால் காவிரி பிரச்சினை தீர்ந்திருக்கும். பல்வேறு போராட்டத்துக்கு இடையே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அதிமுக அரசுதான் அரசிதழில் வெளியிட்டது. ஸ்டாலின் சொல்கிற பொய் எடுபடாது. ஒரு முதல்வரை எப்படி பேச வேண்டும் என்பதுகூட ஒரு கட்சித் தலைவருக்குத் தெரியவில்லை.

ஸ்டாலினுக்கு ஏன் எரிச்சல்?

முப்பாட்டன் காலத்தில் இருந்து விவசாயம் செய்து வருகிற குடும்பத்தைச் சேர்ந்த நான் ‘ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொள்வதில் ஸ்டாலினுக்கு ஏன் எரிச்சல் வருகிறது? டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டத்தை திமுகதான் கொண்டு வந்தது. ஸ்டாலின் இப்போது போராட்டம் நடத்தி விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். அதிமுக அரசு தனிச்சட்டம் இயற்றி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. மழையிலும் வெயிலிலும் விவசாயிகள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். விவசாய நிலத்தைப் பார்க்க சிமென்ட் ரோடு போட்டு சென்று பார்த்த ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?

ரூ.242 கோடிக்கு நிவாரணம்

தமழ்நாட்டில் வறட்சி நிவாரணமாக முதன்முதலில் ரூ.242 கோடி கொடுத்தது அதிமுகவின் ஆட்சி. இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு அதிக நிவாரணம் கொடுத்துள்ளது அதிமுக அரசு. இந்தப் பகுதியில் பருவம் தவறி ஜனவரி மாதத்தில் மழை பெய்தது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தகுந்த இழப்பீட்டை அதிமுக அரசு வழங்கிஉள்ளது. ​‘உழவன் செயலி’ மூலம் விஞ்ஞானமுறை திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்கிறார்கள்.

​இது எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. பொய் சொல்ல மட்டும் தான் அவருக்குத் தெரியும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும், இந்தியளவில் முன் மாதிரி திட்டங் களை அறிவித்து முன்மாதிரி அர சாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

இதேபோல் குறிஞ்சிப்பாடி தொகுதியில் செல்வி ராமஜெயத்துக்கும், கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

முன்னதாக சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியனுடன் சென்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார்.

அரியலூரில் பிரச்சாரம்...

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து அரியலூர் பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது: திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.

தற்போது மக்கள் விழிப்புடன் உள்ளனர். மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதுபோல, சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற முடியாது.

மாவட்டந்தோறும் மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு சீல் வைத்துள்ளார் ஸ்டாலின். ஆனால், நாங்கள் அம்மா சிறப்பு முகாம்களை அமைத்து 9.70 லட்சம் மனுக்களை பெற்று குறைகளை தீர்த்துவைத்துள்ளோம்.

அரியலூர் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் சேதமடைந்த மக்காச்சோளம் பயிருக்கு நிவாரணம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மக்களுக்கு ஒரு நாளைக்கு 30 லிட்டர் பால் தரக்கூடிய கலப்பினப் பசுக்கள் வழங்கப்படும் என்றார்.

முன்னதாக, ஜெயங்கொண்டம் நான்கு சாலையில், ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் கே.பாலுவுக்கு முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

குன்னத்தில் பிரச்சாரம்...

குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக நேற்று குன்னம் பேருந்து நிலையம் அருகே முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது;

மத்தியில் இருக்கும் ஆட்சியுடன் இணக்கமாக இருந்தால்தான் நல்ல பல திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கும், நிதி கிடைக்கும். அதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். நாங்கள் பாஜகவுக்கு அடிமை அல்ல. மக்களுக்கு அடிமையான அவர்களின் அன்புக்கு அடிமையான கட்சி.ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை. ஸ்டாலினுக்கு நல்ல உள்ளம் கிடையாது. அதனால் அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காது என்றார்.

பின்னர் பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.தமிழ்ச்செல்வனை ஆதரித்து பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x