

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளரின் வீடு மற்றும் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனியில் பின்னலாடை மற்றும் நூல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளராக உள்ளார். இந்நிலையில், திருப்பூரில் உள்ள இவரது நிறுவனம் மற்றும் வீட்டில் நேற்று முன்தினம் சென்னை வருமான வரித் துறை அதிகாரிகள் 20 பேர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஏதாவது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பிரமுகர் வீடு மற்றும் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.