

ராயக்கோட்டை அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் பேனர் வைத்தது தொடர்பாக அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் தூருவாசனூர். இங்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்று வந்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராம நுழை வாயிலில் பேனர் வைத்துள்ளனர். அதில், தூருவாசனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கிறோம். அடிப்படை வசதிகள் செய்து தரும் வரையில் எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் அலுவலர்கள் தூருவாசனூர் கிராம மக்களிடம் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அலுவலர்கள் கூறும்போது, ‘‘இக்கிராமத்துக்கு சாலை, மின்வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும், மின் மோட்டார் பழுதாகி உள்ளதால், தண்ணீர் வரவில்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லை என தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக பேனர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்களிடம் பேசி வருகிறோம். மேலும், பழுதடைந்த மோட்டாரை சரி செய்து சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்றனர்.