

100 சதவீத வாக்குப்பதிவுக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவிகள் 100 சதவீதம் வாக்களிக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று தங்களை சார்ந்துள்ளவர்களையும் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தனது ஜனநாயக கடமையை மேற்கொள்ள உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்கு, அதுவே எங்கள் இலக்கு' என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார். முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு ஆட்சியர் விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கண்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேவராஜ், கேபிள் வட்டாட்சியர் பொன்னாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.