

மாணிக்கனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு செறிவூட்டப்பட்ட தொழுஉரம் தயாரிக்கும் முறை தொடர்பாக வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்துக்காக 4-ம் ஆண்டு மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இம்மாணவர்கள் காவேரிப் பட்டணம் அடுத்த மாணிக்கனூர் விவசாயிகளுக்கு, செறிவூட்டப்பட்ட தொழுஉரம் தயாரிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அப்போது, ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் பாதுகாத்தல் அவசியமான ஒன்றாகும். தொழு உரத்தை நேரடியாக பயன்படுத்துவதைக் காட்டிலும், அதை செறிவூட்டிய பின்னர் பயன்படுத்தினால் சத்துக்களின் அளவும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவற்றை தயாரிக்க சாண எருவை சமமாக பரப்பிக் கொண்டு அதில் சூப்பர் பாஸ்பேட்டை நன்கு கலந்து உலரவிட வேண்டும்.
ஒரு டன் சாண எருவுக்கு 150 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை கலக்க வேண்டும். பின்பு அதை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்க வேண்டும். 15 முதல் 30 நாட்களுக்குப் பின்னர் அதனை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செறிவூட்டப்பட்ட தொழு உரம் பயன்படுத்துவதால், பயிருக்கு உயிர்ச் சத்துக்களும், நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.