

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் விளம்பரங்களை கண்காணிக்க ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரச்சாரம் குறித்த செய்திகள், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படுவதை பதிவு செய்கின்றனர். இம்மையத்தின் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளும் பணிகள் குறித்து அலுவலர்கள் ஆட்சியருக்கு விளக்கினர். தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் விளம்பரங்கள் வெளியிட விரும்பினால் விளம்பரத்தின் 2 நகல்களுடன் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் உரிய படிவத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விளம்பரம் தயாரிக்க ஆன செலவு தொகை, விளம்பரத்தை வெளியிடும் நிறுவனத்தின் கட்டண விவரத்துடன், ஒளிப்பரப்பவுள்ள கால அளவு, அதற்கான செலவு, வீடியோ வாகனத்தில் ஒளிப்பரப்புவதாக இருந்தால் வாகனத்திற்கான வாடகை தொகை, ஒளிப்பரப்பவுள்ள நாட்கள் விவரம் ஆகியவற்றுடன் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் விளம்பரங்களுக்கு 3 நாட்களுக்குள்ளும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு 7 நாட்களுக்குள்ளும் ஊடக சான்றளிப்பு வழங்கப்படும். அனுமதி எண் பெறாத விளம்பரங் களை ஒளிப்பரப்பினால் சம்பந்தப் பட்ட தொலைக்காட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
செலவு விவரங்கள் தொகுதியின் செலவின உதவி பார்வையாளர் குழுவிற்கு அனுப்பப்பட்டு, அந்த விவரங்கள் வேட்பாளரின் செலவு கணக்கு பதிவேடுகளில் பதியப்படும், என்றனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.செலவின பார்வையாளர்கள் நியமனம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) தொகுதிக்கு மேவ் பிரகாஷ் பாமநாத், நாமக்கல், பரமத்தி வேலூர் தொகுதிக்கு அஜய் சிங், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிக்கு மந்திப் சிங் பர்மர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் நேற்று வேட்புமனுதாக்கல் நடைபெற்றது. முதல் நாளான நேற்று நாமக்கல் தொகுதியில் போட்டியிட அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ரமேஷ் என்பவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். மற்ற 5 தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் இல்லை.