Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை இணைய தளம் மூலம் வழங்க முகாம் :

சேலம் மாவட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021-ன் போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை இணைய தளம் வாயிலாக வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று (13-ம் தேதி) மற்றும் நாளை (14-ம் தேதி) அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2021-ன் போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை என்விஎஸ்பி இணைய தளம் வாயிலாக வழங்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுரைகள் வரப்பெற்று, இதன் மூலம் இளம் வாக்காளர்கள் தங்கள் மின் வாக்காளர் அடையாள அட்டைகளை தங்கள் அலைபேசியில் பின்வருமாறு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

என்விஎஸ்பி இணையதளத்தில் பதிவு செய்து உள் நுழைய வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது படிவ எண்ணை உள்ளிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி-ஐ சரிபார்த்து உள்ளிட வேண்டும். இ-வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் என்பதை தேர்வு செய்து தங்களது இ-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.

இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதுவரை இ-வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்யாதவர்கள் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக, இன்றும், நாளையும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாம்களில் இணைய வசதியுடன் கூடிய மடிக்கணினியும் அதனை இயக்குவதற்கான தொழில்நுட்ப பணியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி அமைவிடங்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட அனைத்து இளம் வாக்காளர்களும் ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எண்ணிற்கான கைபேசியுடன் தங்களது பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று இதற்கென அமர்த்தப்பட்டுள்ள தொழில்நுட்ப இயக்குநர் உதவியுடன் www.nvsp.in அல்லது www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாக மின் வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இம்முகாமில் இளம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகின்ற மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தேர்தல் நாளன்று வாக்களிக்க அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x