Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் :

கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்காமல் தடுக்க, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாநகராட்சி பகுதி பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும், மக்களிடம் அலட்சியப்போக்கு காணப்படுகிறது.

இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களைக் கண்காணித்து அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு நேற்று முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், “கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம்” என அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்கள், முதியோர்களுக்கு முகக் கவசங்களை வழங்கி, அவற்றை அணிந்து நடமாட அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x