Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
மின் வாரியத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கேங்க்மேன் பணிக்கு நியமனம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மின்வாரியச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி மணப்பாறையை அடுத்த எப்.கீழையூரைச் சேர்ந்த ரங்கராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மின் வாரியத்தில் சுமார் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பாணை வெளியானது. இப்பணியிடங்களுக்கு 2019-ல் விண்ணப்பித்தேன். உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நான் உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று கடந்தாண்டு நடந்த எழுத்துத்தேர்வில் பங்கேற்றேன். இதன் முடிவு இந்தாண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இதில் எனக்கு 63 மதிப்பெண்கள் கிடைத்தது. இருப்பினும் எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கவில்லை. எழுத்துத் தேர்வில் பூஜ்ய மதிப்பெண் பெற்றவர்கள், என்னை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் ஆகியோருக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மின்வாரிய கேங்மேன் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, மின்வாரிய கேங்மேன் பணிக்கு என்னைத் தகுதியானவராக அறிவித்து பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல, திருச்சி ஜானகிராமன் என்பவரும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
பின்னர், மனு தொடர்பாக தமிழக மின்வாரியத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT