

தேர்தல் பறக்கும் படையினர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரில் வெவ்வேறு இடங்களில் நடத்திய வாகனத் தணிக்கையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.20.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் 3 ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சேலம் மேற்கு தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த ஜமாலுதீன் என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், செவ்வாய்பேட்டை பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருவதாகவும், வியாபாரம் முடிந்து வீட்டுக்கு பணம் எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
சேலம் தாதகாப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபதிராஜா தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கான்டிராக்டர் மதிவாணன் என்பவர் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.73,400 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, சங்ககிரி ஆர்எஸ் பகுதியில் பிடிஓ முரளிதரன் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில் திருவாண்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.95 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி
இதுதவிர, ஏரியூர் தமிழ்நாடு கிராம வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர், நேற்று மாலை ரூ.1 லட்சத்து 6500 பணத்துடன் காரில் தருமபுரி நோக்கி சென்றார். அப்போது, பென்னாகரம் அருகே பெரும்பாலை ரவுண்டானா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டபோது பணத்துக்கான ஆவணங்கள் இல்லாத நிலையில் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், தொப்பூர் சோதனைச் சாவடியில் நேற்று மாலை பறக்கும் படை சோதனையில் காரில் சேலத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற காரில் ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் பணம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. பன்றி வியாபாரியான இவர் ஆந்திராவில் இருந்து பன்றிகளை வாங்கி வரச் சென்றுள்ளார். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
அதேபோல ஓசூர் நாகொண்டப்பள்ளி அருகே குமார் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் உதயகுமார் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.64 ஆயிரம் பணத்தையும், தளி சாலை அந்திவாடி சோதனைச்சாவடி அருகே முருகன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆனந்த் என்பவரது காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.