

சங்ககிரி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். அதிகாரிகள் விளக்கம் அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் சமரசம் அடைந்தனர்.
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சங்ககிரி வட்டச் செயலர் ராஜேந்திரன், கொமதேக மாவட்ட செயலாளர் சரவணன், கோட்ட வருதம்பட்டி திமுக பொறுப்பாளர் ரத்தினம் உள்ளிட்டோர் சங்ககிரி அடுத்த வடுகப்பட்டி டி.வளையசெட்டிப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் திரண்டு பயிர்கடன் தள்ளுபடி தொடர்பாக குற்றசாட்டுகளை வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக ராஜேந்திரன் கூறும்போது, “பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும், பயிர்க்கடன் பெற்று, கடந்த டிசம்பர் 8-ம் தேதி திரும்ப செலுத்தியவர்கள் மீண்டும் பயிர்க்கடன் கோரி விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பயிர்க் கடனுக்கான உரம் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால், கடன் தொகையை வழங்கவில்லை. மேலும், பயிர்க் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது” என்றார்.
இதையடுத்து, வங்கி அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பட்டியல் வழங்கப்பட்டது. கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து சென்றனர்.