

சேலம் மாவட்ட வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் ஆய்வு செய்தார்.
எடப்பாடியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மற்றும் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விவன் போது, வாக்குச் சாவடியில் வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கம், பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் வெங்கடாச்சலம், உதவி செயற்பொறியாளர் முருகேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
சேலத்தில் ஆய்வு
சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை, தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அங்கு வாக்கு எண்ணும் அரங்கு, பாதுகாப்பு அறை ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள், நிறுவப்பட வேண்டிய தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு சாதனங்கள், மின் வசதி பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின்போது, மாநகர பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.