

ஊத்தங்கரை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அனுமன்தீர்த்தம் பகுதி பாவக்கல் பிரிவு சாலையில் கடந்த 26-ம் தேதி 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்ட இளைஞர் திருப்பத்தூர் மாவட்டம் மேல்அச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திலீப்குமார் (25) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், திலீப்குமாரின் நண்பரான ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (21), அரூர் அடுத்த சின்னாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோர் திலீப்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸார், ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.