சரபங்கா உபரிநீர் திட்டத்துக்கு எதிராக காவிரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சரபங்கா உபரிநீர் திட்டத்துக்கு எதிராக  காவிரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சரபங்கா உபரிநீர் திட்டத்தைத் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோட்டூர் வடக்கு ஒன்றியத் தலைவர் எஸ்.வி.கே.சேகர், செயலாளர் ராவணன், கிளை பொறுப்பாளர்கள் கோட்டூர் என்.ஜீவானந்தம், எஸ்.முருகானந்தம், இருள்நீக்கி பாலசுப்பிரமணியம் உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

மேட்டூர் அணை சரபங்கா உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவிரி டெல்டாவில் 18 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும். தமிழகம் முழுவதிலும் 30 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். எனவே, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் முன்வர வேண்டும். இத்திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்றார்.

இதேபோல, நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் மீனம்பநல்லூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கருப்புக் கொடியேந்தி, குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட பொருளாளர் சபாநாதன், இணைச் செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குணசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in