மருத்துவக் கழிவுகளை தீவைத்து எரித்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.1.06 லட்சம் அபராதம் தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை

மருத்துவக் கழிவுகளை தீவைத்து எரித்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.1.06 லட்சம் அபராதம் தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை
Updated on
1 min read

திடக்கழிவு மேலாண்மை விதிகளைமீறி மருத்துவக் கழிவுகளை தீவைத்து எரித்த தனியார் மருத்துவமனைக்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ரூ.1.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை, உயிர் நச்சுக்கழிவுகள் எனப் பிரித்து சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் உருவாகும் உயிர் மருத்துவக் கழிவுகள் அங்கீகரிக்கப்பட்ட தனியார்நிறுவனத்தின் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளுக்கு மாறாக கழிவுகளை கொட்டி எரிப்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் வித்யா தலைமையில், பொது சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருவதும்,மருத்துவமனை கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தாமல் தீவைத்து எரித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு ரூ.1.06 லட்சம்அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது.

இது குறித்து ஆணையர் கூறும்போது, ‘‘பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனத்தினர் தங்களால் உருவாக்கப்படும் கழிவுகளை முறையாகப் பிரித்து மாநகராட்சி பொது சுகாதார பணியாளர்களிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். மருத்துவமனைகள் கழிவுகளை பிரித்துக் கொடுப்பதோடு, உயிர் மருத்துவ கழிவுகளை உரிய முறைப்படி பிரித்து அதற்கென பிரத்தியேகமாக செயல்படும் தனியார் நிறுவனங்கள் மூலம் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in