Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலுக்கு கூடுதலாக 494 துணை வாக்குச்சாவடிகள் அமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக 494 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஏற்கெனவே 1,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விளாத்திகுளம் தொகுதியில் 53 வாக்குச் சாவடிகள், தூத்துக்குடிதொகுதியில்123 , திருச்செந்தூர் தொகுதியில் 77, வைகுண்டம் தொகுதியில் 56, ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 92, கோவில்பட்டி தொகுதியில் 93 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 494 வாக்குச் சாவடிகளில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர். இந்த வாக்குச் சாவடிகளை பிரித்துஏ, பி என துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.அப்போது மொத்த வாக்குச் சாவடிகள் 2,097ஆக அதிகரிக்கும்.

வாக்குச்சாவடிகளில் வீட்டுக் கதவு எண் இலக்கத்தின்படி வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு துணை வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள 494 துணை வாக்குச் சாவடிகளில் 476 ஏற்கெனவே முதன்மை வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள அதேபள்ளி வளாகத்தில் அமைக்கப்படும். போதிய இடவசதி இல்லாதகாரணத்தால் 18 துணை வாக்குச் சாவடிகள் மாற்று இடத்தில் அமைக்கப்படும். இன்னும் சில தினங்களில் இப்பணி முடிக்கப்படும். இதுகுறித்து ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் தூத்துக்குடி சார்ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கீதாஜீவன் எம்எல்ஏ (திமுக), சந்தானம்(அதிமுக), எம்.எஸ்.முத்து (மார்க்சிஸ்ட்), பாலசிங் (காங்கிரஸ்), ராமகிருஷ்ணன் (தேமுதிக)மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மொத்த வாக்குச் சாவடிகள் 2,097ஆக அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x