Published : 19 Feb 2021 03:24 AM
Last Updated : 19 Feb 2021 03:24 AM

தஞ்சாவூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டுவந்த நெல் தேக்கம் கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்த நெல் பல நாட்களாக தேங்கியுள்ளதாகவும், அந்த நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 3.33 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில், ஜனவரி மாதத்தில் பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 60 சதவீத நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின. இந்நிலையில், எஞ்சிய நெல்லை அறுவடை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டுவந்தனர். ஆனால், அங்கு உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக கரந்தை பூக்குளம், வேங்கராயன்குடிக்காடு, சூரக்கோட்டை, அலிவலம், மதுக்கூர், தெலுங்கன்குடிக்காடு போன்ற இடங்களில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஏராளமான நெல், வாரக்கணக்கில் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுங்கான்திடலைச் சேர்ந்த விவசாயி மதியழகன்- தனலட்சுமி தம்பதி கூறியதாவது:

நாங்கள் 2 ஏக்கரில் அறுவடை செய்த நெல்லை பூக்குளம் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் கொண்டுவந்து கொட்டி வைத்துள்ளோம். நேற்று(நேற்று முன்தினம்) வரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. பிப்.25-ம் தேதி எங்களின் மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இந்த நெல்லை விற்பனை செய்துதான் திருமணத்தை நடத்த வேண்டும்.

ஆனால், தினமும் கொள்முதல் நிலையத்தில் இரவு- பகலாக காத்திருப்பதால், எங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. பூக்குளம் கொள்முதல் நிலையம் தொடர்ந்து திறக்கப்படாததால், இன்று(நேற்று)தான் வேறு கொள்முதல் நிலையத்துக்கு நெல்லை கொண்டு செல்கிறோம் என்றனர். மேலும், தற்போது கொள்முதல் நிலையங்களில் அதிகளவு நெல் தேங்கியுள்ளதால், ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டத்தில் 457 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் விவசாயிகள் பலரும் நெல்லை கொண்டு வருவதால் சற்று தாமதம் ஏற்படுகிறது. முதலில் வரும் விவசாயிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை குறுவையில் 1.72 லட்சம் டன், சம்பாவில் 2.02 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளோம். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் மாவட்டம் முழுவதும் 33 இடங்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகள், குடோன்களில் இருப்பு வைக்கிறோம். சாக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x