Published : 14 Feb 2021 03:20 AM
Last Updated : 14 Feb 2021 03:20 AM

நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்கக் கோரி சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் பறிக்கப்பட்ட கட்டணச் சலுகைகளை வழங்கவும் வலியுறுத்தல்

கரோனாவுக்குப் பின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். பறிக்கப்பட்ட கட்டணச் சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் நேற்று சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

தஞ்சாவூர் ரயிலடியில் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கோ.அன்பரசன், சி.சந்திரகுமார், வெ.ஜீவக்குமார், அய்யனாபுரம் நடராஜன், பாபநாசம் சரவணன், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் தில்லைவனம், துரை.மதிவாணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கரோனாவுக்கு பின் ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

அனைத்து அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. ஆனால், முன்பு ரயிலில் பயணம் மேற்கொண்டவர்கள், தற்போது உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, கரோனாவை காரணம் காட்டி கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட அனைத்து பயணிகள் ரயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும்.

தஞ்சாவூர் வழியாக இயக்கப்பட்ட மயிலாடுதுறை- திருச்சி, மயிலாடுதுறை- திருநெல்வேலி, திருச்சி- காரைக்கால் ரயில்களை முழுமையாக இயக்க வேண்டும்.

சென்னை, கோவை உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களுக்கு, தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்ட விரைவு ரயில்களையும் முழுமையாக இயக்க வேண்டும்.

விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பறிக்கப்பட்ட கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். கரோனாவை காரணம் காட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களை, மீண்டும் பழைய முறையிலேயே இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x