

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டாரத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை வைரக்கண்ணு வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ பேராவூரணி சிங்காரம், மாநில துணைத் தலைவர் பண்ணவயல் ராஜா தம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் கோ.அன்பரசன், பட்டுக்கோட்டை ராமசாமி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் டி.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கடந்த 2 மாதங்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க கட்சித் தலைமையை கேட்டுக்கொள்வது.
கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், தேசிய வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்களையும், விவசாயம் சார்ந்த நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்குண்டான தொகையை மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து பெற வேண்டும்.
கடந்த 11 மாதங்களாக கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ரயில்கள் ஓடவில்லை. தற்போது, 90 சதவீதம் கரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளதால், உடனடியாக மீண்டும் நாடு முழுவதும் ரயில்களை மத்திய அரசு இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.