திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஊராட்சியில் புதிய கால்நடை மருத்துவமனை தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றிய அமைச்சர் கே.சி.வீரமணி, அருகில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உள்ளிட்டோர்.
திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஊராட்சியில் புதிய கால்நடை மருத்துவமனை தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றிய அமைச்சர் கே.சி.வீரமணி, அருகில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கால் நடை மருத்துவமனையை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி, ஆசிரியர் நகர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை, தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இதையொட்டி, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதிய கால்நடை மருத்துவமனை வளாகத்தில் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது, அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, "பாச்சல் ஊராட்சியில் தொடங்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு மக்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசு புதிதாக கால்நடை மருத்துவ மனையை தொடங்கியுள்ளது.

இப்பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல் படுத்தப்பட்டு வரும், இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கறவை மாடுகள் வழங்கும் திட்டம், நாட்டு கோழிகள் வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் விவசாய மக்களுக்கு அதிகபடியான கால்நடைகள் வழங் கப்பட்டுள்ளன.

இத்திட்டம் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இந்த மருத்துவமனை மூலம் பெற்று பயன்பெறலாம்.

நாட்டிலேயே இல்லாத அளவுக்கு சேலம் மாவட்டம், சின்ன சேலம் என்ற இடத்தில் ரூ.1,300 கோடி மதிப்பில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற திட்டங்கள் இந்தியா விலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை விவசாயிகள் 20 பேருக்கு பால் எடுத்துச்செல்லும் கேன், ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு தீவனம், நாய் வளர்ப்போர்களுக்கு ஊட்டச்சத்து பொட்டலம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மருத்துவர் நவநீத கிருஷ்ணன், கால்நடை உதவி இயக்குநர் நாசர், கால்நடை மருத்துவர் பிரசன்னா, கூட்டுறவு அச்சகத் தலைவர் டி.டி.குமார், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in