நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காய்கறிகள் கருகுவதால் அறுவடைப் பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காய்கறிகள் கருகுவதால் அறுவடைப் பணிகள் தீவிரம்
Updated on
1 min read

உதகை மற்றும் குன்னூரில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப் பொழிவும் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர வெப்பநிலை நகரப் பகுதிகளில் 4 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. அதிகாலை நேரங்களில் புல் தரைகள் பனி படர்ந்து வெண்மையாக காட்சியளிக்கின்றன.

உதகை, குன்னூர், ஜெகதளா, காரக்கொரை, மல்லிக்கொரை உட்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை மற்றும் மலைக் காய்கறிகளான கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் பயிர்கள், பனியின் தாக்கத்தால் கருகி வருகின்றன.

தேயிலைச் செடிகள் கருகி உள்ளதால், வரத்து குறைந்து தேயிலைத் தூள் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேயிலைச் செடிகள் மற்றும் காய்கறிப் பயிர்களில் கருகல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே மழையால் தேயிலை உற்பத்தி பாதியளவு குறைந்த நிலையில், தற்போது பனியால் தூள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in