

சேலத்தில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ள சுந்தர்லாட்ஜ் சிக்னல், ஒரு மாதத்துக்கு மேலாக செயல்படாமல் உள்ளதால், அங்கு எந்நேரமும் போக்குவரத்து குளறுபடி மற்றும் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
சேலம் மாநகரில் உள்ள சுந்தர்லாட்ஜ் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல், அதிக போக்குவரத்து நிறைந்த இடமாக உள்ளது. குறிப்பாக, மாநகர வாகனங்கள் மட்டுமல்லாது, சென்னை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் பேருந்துகளும் வந்து செல்லக் கூடிய சாலை சந்திப்பாக உள்ளது. இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலுடன் இருக்கும்.
இங்கு, டிஜிட்டல் சிக்னல் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக, சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “சுந்தர் லாட்ஜ் சிக்னல், மிக முக்கிய சாலை சந்திப்பாக இருக்கிறது. இங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக, சிக்னல் செயல்படாத நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை போலீஸாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
சிக்னல் செயல்படாததால், 3 முக்கிய சாலைகள் வழியாக வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலை சந்திப்பை கடந்து செல்வதால், பெரும் குளறுபடி நிலவுகிறது. எனவே, இங்கு சிக்னலை சரிசெய்து, மீண்டும் செயல்படுத்துவதற்கு போக்கு வரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.