Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

சின்னக்கொத்தூரில் சிதைந்து வரும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூர் கிராமத்தில் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது தொடர்பாக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வரலாற்று ஆர்வலர்கள்.

கிருஷ்ணகிரி

சின்னகொத்தூர் கிராமத்தில் சிதைந்து வரும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க, கிராம மக்கள் உதவியுடன் வரலாற்று ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் கிராமம், ஒரு காலத்தில் குந்தாணி என்ற பெயரில் ஒய்சாள அரசின் தலைநகரமாக விளங்கியது. இதற்கு ஆதாரமாக விளங்கும் வரலாற்றுச் சின்னங்கள், கோயில்கள் சின்னகொத்தூரில் நிறைந்து காணப்படுகின்றன. இவை திறந்த வெளியில் இருப்பதால் சிதைந்து வருகின்றன.

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சின்னகொத்தூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வரலாற்று ஆர்வலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், காப்பாட்சியர் கோவிந்தராஜ் பேசியதாவது: தமிழகப் பகுதிகளை ஆண்டு வந்த வீரராமநாதன், பாண்டியன் மாறவர்மனுடன் தன் பகுதிகளைச் சண்டையில் இழந்து திருச்சி கண்ணனூரை கைவிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் சின்னக்கொத்தூர் என்று அழைக்கப்படும் குந்தாணி நகரைத் தலைநகராக்கி ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் நரசிம்மன், 50 ஆண்டு காலம் குந்தாணியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார். குந்தாணி நகரம், தலைநகராக இருந்த போது கட்டப்பட்ட கோயில்கள் தற்போதும் உள்ளன. குந்தாணியின் பெருங்கோயில் குஞ்சம்மாள கோயில் ஆகும். தமிழகத்தில் எந்த கோயிலுக்கு இல்லாத ஒரு சிறப்பம்சம் இக்கோயிலுக்கு உண்டு. இக்கோயிலிருந்து 14 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. குந்தாணிப் பகுதியிலிருந்து ஆண்ட, சண்டையில் உயிரிழந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்களை தளமாகப் போட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னங்கள், கோயில்கள் பழமை மாறாமல் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு காப்பாட்சியர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து கோயில்களைப் புனரமைக்க கிராம மக்களுடன் இணைந்து 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதற்காக மத்திய, மாநில தொல்லியல் துறையில் அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில், சுற்றுலாத்துறை அலுவலர் சிவகுமார், கிராம முக்கிய நிர்வாகிகள் கணேசன், கோவர்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x