

கையில் வேலை எடுத்தால் தேர் தலில் வென்றுவிடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று அவர் கூறியது: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கையில் வேலை எடுத்தால் தேர்தலில் வென்று விடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. சூரசம்ஹாரத்தில் நம்பிக்கை உள்ளதாக திமுக கூறுவதே வாக்குக்காகத்தான். மக்களிடம் மனுக்கள் பெற்று 100 நாட்களில் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் கூறுவது அரசியல் நாடகம்.
கரோனா தடுப்பூசி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது. டெல்லியில் 2 மாநில விவசாயிகள் மட்டுமே போராட்டத்தைத் தொடர்கின்றனர். இப்போராட்டத்தால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய பலன் தடை படுகிறது என்பதை உணர்ந்து, எதிர்க்கட்சிகள் காட்டும் தவறான பாதையில் விவசாயிகள் செல்லக் கூடாது.
தமிழக மீனவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும். திமுக கூட்டணியில்தான் சின்னம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் ஒருபோதும் இல்லை என்றார்.