Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM

பாஜகவுக்கு எதிரான மனநிலையே தமிழகத்தில் உள்ளது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து

பாஜகவுக்கு எதிரான மனநிலையே தமிழகத்தில் உள்ளது என காங்கிரஸ் கட்சின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

‘தமிழகம் மீட்க, விவசாயம் காக்க, வாங்க ஒரு கை பார்ப்போம்’ என்ற பிரச்சார பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார். பிரச்சார பயணத்தின் 3-ம் நாளான நேற்று கரூர் மாவட்டம் சின்னதாராபுரம், கரூர் ஜவஹர் பஜார், அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய இடங்களில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது:

தமிழக மக்கள் என் மீது மட்டுமல்ல, எனது பாட்டி இந்திராகாந்தி, தந்தை ராஜீவ்காந்தி ஆகியோர் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளனர். நானும் தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன்.

தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது. அதை மாற்ற தமிழக மக்களுக்கு உதவ இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அதன்மூலம் நீங்கள் ரிமோட்டின் பேட்டரியை அகற்ற முடியும். அதன் பிறகு ரிமோட் செயலிழந்துவிடும்.

திருக்குறள் வாசிக்கிறேன்

தமிழக மக்கள் கண்ணியம், சுயமரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் ஆன்மாவை தரிசிக்க தற்போது திருக்குறளை வாசித்து வருகிறேன். அதில் நேர்மறை சிந்தனைகள், சுயமரியாதை கருத்துகள் உள்ளன.

விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் யாரையும் பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமருக்கு வேண்டிய தொழிலதிபர்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன. பாஜகவுக்கு எதிரான மனநிலையே தமிழகத்தில் உள்ளது என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

விவசாயிகளுடன் சந்திப்பு

வாங்கல் அருகே மாரிக்கவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் பங்கேற்க சென்ற ராகுல்காந்தி, நிகழ்வு நடக்கும் இடத்துக்கு மாட்டுவண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார். மாட்டு வண்டியை எம்.பி ஜோதிமணி ஓட்டிச் சென்றார். இக்கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளை கேட்டு அதற்கு ராகுல்காந்தி பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x