

சேலம் காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 28-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பும், திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பலவிதமான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு கோயில் பூசாரி சரஸ்வதி சதாசிவம் திருக்கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜையும், முத்தங்கி அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதர கந்தசாமி எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. இன்று (25-ம் தேதி) இரவு சுவாமி குதிரை வாகனத்திலும், நாளை (26-ம் தேதி) மின் அலங்கார சப்பரத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெறவுள்ளது. வரும் 27-ம் தேதி மதியம் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், இரவு 12 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவமும், அதனை தொடர்ந்து சுவாமி திருத்தேருக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 28-ம் தேதி நடக்கிறது. அன்று காலை சொர்க்கவாசல் திறப்பும், சர்வ அலங்காரத்தில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று மதியம் 3.30 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி (ஈரோடு) மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தமிழரசு (நாமக்கல்) முன்னிலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
வரும் 29-ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், இரவு முத்துப்பல்லக்கு ஊர்வலமும் நடக்கிறது. வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு சத்தாபரண ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி, மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு வானவேடிக்கையுடன் சத்தாபரண மகாமேரு சுவாமி ஊர்வலம் மற்றும் வசந்த விழாவுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகன், பரம்பரை அறங்காவலரும் பூசாரியுமான சரஸ்வதி சதாசிவம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.