Published : 25 Jan 2021 03:17 AM
Last Updated : 25 Jan 2021 03:17 AM

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட கிளானூர் பகுதியில் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத் திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி யின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் தலைமையில் ஆய்வுக் குழுவினர் ஜவ்வாதுமலைப்பகுதியில் கள ஆய்வு நடத்தினர். இதில், புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறும்போது, "வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களை ஜவ்வாதுமலை உள்ளடக்கியுள்ளது. மலையின் மேற்குப் பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புதூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கிளானூர் பகுதியில், கள ஆய்வு நடத்தியபோது அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளை கண்டெடுத்தோம்.

கிளானூர் பகுதியில் உள்ள இலவநாச்சியம்மன் கோயில் அருகே ரங்கன் என்பவருக்கும் சொந்தமான நிலத்தில் சிறிய கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் வளாகத்தில் 60-க்கும்மேற்பட்ட பெரிதும், சிறிதுமாய் புதிய கற்காலக்கருவிகள் உள்ளன. இவற்றை இப்பகுதி மக்கள் பிள்ளையார் எனக்கூறி வழிபட்டு வருகின்றனர்.

கிளானூரில் உள்ள கோயிலுக்கு அருகே கொல்லை என்ற பகுதி உள்ளது. இங்கு புதர் மண்டிக்கிடக்கும் பகுதியில் அரை வட்டவடிவில் பெரிய 5 கற்களும் அதைச்சுற்றி 40-க்கும் மேற்பட்ட கற்கால கருவிகளை கண்டெடுத்தோம். இந்த கற்கால கருவிகள் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்தியதாகும்.

மனிதன் இரும்பை கண்டறிவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழவழப்பான கல்லைக் கோடாரி போன்ற அமைப்போடு உருவாக்கினான். மேல்பகுதி கைகளில் அடங்கும் படியும், அடிப்பகுதி அகன்றும் கூர்மையாகவும் இக்கற்கள் காணப்படும். பார்ப்பதற்கு இரும்பினால் செய்யப்பட்ட கோடாரி போல் இருக்கும். மனிதனின் கைகளில் அடங்கும்படி இக்கற்கள் வடிவமைக்கப்படுவதால், இதை கைக்கோடாரி என்று அழைப்பதுண்டு. விலங்குகளை வேட்டையாடவும், மரம், செடி, கொடிகளை வெட்டி தூய்மை செய்யவும் இக்கற்கருவிகள் அந்தகால மனிதர்கள் பயன்படுத்தி வந்தனர்.

சென்னை பல்லாவரத்திலும், கும்பகோணம் அருகேயுள்ள கண்டியூரில் கிடைத்த கைக்கோடா ரிகள் சிறப்புடையதாகும். ஆனால், அங்கு கிடைத்த கைக்கோடாரி களைக் காட்டிலும் ஜவ்வாதுமலை யில் குவியல், குவியலாக மலைப் பகுதியில் கிடைத்துள்ள கைக் கோடாரிகள் மேலும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொதுவாக மலைவாழ் மக்கள் தங்களது விவசாய நிலங்களில் உழவுத் தொழிலை மேற்கொள்ளும் போதும், ஓடைகளுக்கு அருகே கிடைக்கும் புதிய கற்கால கருவிகளை சேகரித்து ஊர் பொதுவில் உள்ள கோயில்களில் வைத்து அவற்றுக்கு பிள்ளையார் என பெயரிட்டு வழிபாடு நடத்தி பல நூறு ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர். ஜவ்வாதுமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும். தமிழ் வரலாற்றை முன்னோக்கி எடுத்துச்செல்ல இது ஒரு சான்றாக அமைந்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x