Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM

டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்தவையாக அறிவிக்கக் கோரி காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்/ தஞ்சாவூர்/ புதுக்கோட்டை

காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், நெற்பயிர் பாதிப்புகளை தவறாக கணக்கெடுப்பு நடத்தும் தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் அதற்கு துணைபோகும் வேளாண் துறை அதிகாரிகளை கண்டித்தும் நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று திரண்டனர்.

முன்னதாக, பல்வேறு பகுதிகளிலிருந்து டிராக்டர்களில் வந்த விவசாயிகள், பின்னர் அழுகிய பயிர்களை கைகளில் ஏந்தியபடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் தர் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். இதில், மண்டலத் தலைவர் என்.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் ம.மணி, தலைவர் துரை.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெருமழைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். 100 சதவீத இடுபொருள் இழப்பீட்டை அனைத்து கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். பயிர் அறுவடை ஆய்வு செய்வதைக் கைவிட்டு, மழை அளவைக் கணக்கில் கொண்டு, மாவட்டந்தோறும் 100 சதவீதம் பயிர்க் காப்பீடு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 என விலை நிர்ணயம் செய்து, நிபந்தனையின்றி உடனே கொள்முதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x