Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

புதுச்சேரி, காரைக்காலில் 18-ம் தேதி முதல் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்படும்

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு அறிவிக்கப்பட்ட பல கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, கடந்த அக்டோபர் 8-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

முதற்கட்டமாக, பெற்றோர் அனுமதியுடன் 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஐயங்களைத் தீர்க்கும் வகுப்பு தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து கடந்த 4-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இவ்வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் வரும் 18-ம் தேதி முதல் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிரதேசங்களில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் அனைத்தும் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை, 18-ம் தேதி முதல் மதியம் வரை மட்டுமே செயல் படும்.

பள்ளிகள் அனைத்தும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x