

அரசு வழங்கிய வீட்டுமனைப்பட்டா நிலத்தை இரு மாதங்களில் சமன்படுத்தித் தருவதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி, சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் இலவச வீடு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடம் பாறை, கரடு முரடாக இருப்பதால், அதனை சமன் செய்து தரக்கோரி கடந்த நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தை சமன் செய்து தருவதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலத்தை சமன் செய்யும் பணி இரண்டு நாட்களுக்கு மட்டுமே நடந்தது. அதன்பின்னர் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை சமன் செய்து, அளவீடு செய்து தரக்கோரி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், 11-ம் தேதி காலை 10 மணிக்கு காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களுடன் வட்டாட்சியர் பரிமளாதேவி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் இரவு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 2-வது நாளாக போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. போராட்டக்களத்திலேயே மாற்றுத்திறனாளிகள் உணவு சமைத்து சாப்பிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் நேற்று மாலை வருவாய் கோட்ட அலுவலர் சைபுதீன், வட்டாட்சியர் உள்ளிட்டோர், இரு மாதத்தில் நிலத்தை சமன்படுத்தித் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.