Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

தேர்தல் வாக்குறுதிகளைப் பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேச்சு

ஈரோட்டில் வணிகர்கள், பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு

தேர்தல் வாக்குறுதிகள், கொள்கை களைப் பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை, என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

ஈரோடு -பெருந்துறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

ஒவ்வொரு நகரத்தையும், தலை நகருருக்கு நிகராக மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் உள்ள தனித்திறமையைக் கொண்டு அதனை உலகம் போற்றும் ஊராக மாற்ற முடியும். இருந்த இடத்தில் இருந்து நம் அனைவரையும் இணைக்கும் விஞ்ஞானம் இன்று கைகூடிவிட்டது. இதேபோல்,ஒருவருக்கு ஒருவர் இணைக்கும் ஒரு அரசியல் தேவை. அது நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மையான அரசியல் என சொல்வதற்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும். அது எங்களிடம் இருக்கிறது.

நாங்கள் சிறுகட்சியாக இருந்தாலும், நேர்மை வழி செல்வதால், கயவர்களை எதிர்க்கும் துணிச்சல் வருகிறது. எங்கள் அரசியல் கொள்கையும், யுக்தியும், பலமும் நேர்மை என்ற ஒரே வார்த்தையில் அடங்கி விட்டது. எங்கள் தேர்தல் வாக்குறுதிகள், கொள்கைகள் தயாராகி கொண்டிருக்கிறது. ஆனால், அதைப்படித்து ஓட்டுப்போடுவார்கள் என நான் நம்பவில்லை. ஆள் பார்த்து, சாதி பார்த்து தான் ஓட்டு போட்டுக்கொண்டிருக்கிறோம். இவன் சாதிப்பானா என்று பார்த்து இதுவரை யாரையும் தேர்ந்தெடுத்ததில்லை. தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.

நமக்கு அடுத்த தலைமுறை நம்மை திட்டாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் இன்றே பணி துவங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கும் நாளில் புதிய அரசியலுக்காக விதைபோட துணிய வேண்டும். அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் இங்கே ஜவுளி தொழிலுக்கான கட்டமைப்புகள் விரைவில் உருவாக்கப்படும். ஈரோட்டில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான சூழல் இங்கு இருக்கிறது. விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது, உதவி செய்வது என்பது தர்ம காரியமில்லை, தலை காக்கும் காரியம்.

விவசாயம் இல்லாது, தொழில்கள் மட்டும் வளர்ச்சி அடைந்தால் உணவுக்கு என்ன செய்வது? விவசாயத்தை புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும். நான் விவசாயி என்று பொதுவெளியில் பெருமிதத்துடன் சொல்லும் நிலையை விவசாயிகளுக்கு உருவாக்க வேண்டும். விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு முழு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என பேசியபோது கேலி பேசியவர்கள், இப்போது நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க தொடங்கி இருக்கின்றனர். உச்ச நீதிமன்றமே அதை வழிமொழிவது போல் தீரப்பை எழுதியது எங்களுக்கு கிடைத்த பெருமை.

உங்களைப் போல் தமிழக அரசியலை மாற்ற வேண்டும் என்ற ஏக்கம் கொண்டவன் நான். அரசுக்கும், மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற்றால் இடைத்தரகர்கள் ஒழிந்து விடுவார்கள், என்றார்.

இதைத்தொடர்ந்து லக்காபுரம், மொடக்குறிச்சி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x