

சூளகிரி அருகே ஒற்றை யானை விரட்டியதில், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற விவசாயிகள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த எலசேப்பள்ளியை சேர்ந்த விவசாயி ராஜகோபால் (35). இவரது நிலத்தில் நேற்று அதிகாலை காட்டுப் பன்றிகள் நுழைந்து விட்டன. இதனையறிந்த ராஜகோபால் தன்னிடம் வேலை செய்யும் புளியரசி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ்(58) என்பவரை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் எலசேப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள தனது நிலத்துக்குச் சென்றார்.
அப்போது அப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை இருவரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தில் இருவரும் வேகமாக சென்றனர். அப்போது வாகனத்தில் இருந்து கீழே விழுந்து, ராஜகோபால் மற்றும் முனிராஜ் ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.