

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருக்காட்டுப் பள்ளி அருகே விவசாயிகள் நேற்று ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக அறிவித்து, வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட் டுப்பள்ளி அருகே முல்லைக்குடி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த வெ.ஜீவக் குமார், பி.முருகேசன் ஆகியோ ரின் தலைமையில், கிராம மக்கள் நேற்று வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், டெல்லியில் 37 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஆங்கில புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக கடைபிடிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல, பட்டுக்கோட்டை, பூதலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.