

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில், அறுவடை இயந்திர வாடகை கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விவசாயிகள், இயந்திர உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்ட இடங்களில், தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. ஆள்பற்றாக்குறை காரணமாக, பெரும்பாலான இடங்களில் அறுவடை இயந்திரங்கள் மூலம்தான் அறுவடை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் போதிய அளவில் இயந்திரங்கள் இல்லாததால், விவசாயிகள் தனியார் அறுவடை இயந்திரங்களை நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதைப் பயன்படுத்தி, இயத்திரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்து, இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடைந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன், தஞ்சாவூர் ஆட்சியருக்கு நேற்று அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஆண்டுதோறும் சம்பா பயிர் அறுவடை தொடங்கும் முன்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட அளவிலான விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள், வேளாண் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, நெல் அறுவடை இயந்திர வாடகை மற்றும் வைக்கோல் சுருட்டிக் கட்டும் இயந்திர வாடகை ஆகியவற்றை நிர்ணயம் செய்து, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பது வழக்கம்.
நிகழாண்டு, மேட்டூரில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், முறையாக சம்பா சாகுபடி பணிகள் குறித்த காலத்தில் தொடங்கின.
இதனால், தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அறுவடை பணிகள் தொடங்கி, மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக, மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கடந்த ஆண்டு மணிக்கு ரூ.1,800 வாடகை வசூலித்த நிலையில், தற்போது மணிக்கு ரூ.3,000 வரை வசூலித்து வருகிறனர். அதிலும், இடைத்தரகர்கள் சிலர் அதிகாரிகளின் துணையுடன் விவசாயிகளிடம் இருந்து அதிக வாடகையை கட்டாய வசூல் செய்து வருகின்றனர். எனவே, வாடகை வசூலை ஒழுங்குபடுத்தி, முறையான கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தை ஆட்சியர் கூட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.