

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலய வளாகத்தில் இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் மாட்டுத்தொழுவம் போன்று குடில் அமைக்கப்பட்டு, பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு பூண்டி மாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பாக்கியசாமி தலைமையில், துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்குத் தந்தைகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், பேராலய அதிபர் பாக்கியசாமி இயேசு பிறப்பை அறிவித்து, இறை பாடல்களுடன் குழந்தை இயேசு சொரூபத்தை பேராலய வளாகத்தில் அமைக்கபட்டிருந்த குடிலில் வைத்தார்.
இதேபோல, தஞ்சாவூர் தூய இருதய அன்னை பேராலயத்தில் பங்குத் தந்தை இருதயராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், இயேசுவின் சொரூபத்தை கும்பகோணம் மறைமாவட்ட பங்குத் தந்தை தேவதாஸ் தூக்கி வந்து தொட்டிலில் இட்டார். தொடர்ந்து, மறைமாவட்ட ஆயர் எப்.அந்தோனிசாமி சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.