

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில துணைச் செயலா ளர் கே.சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர் கோ.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி வரவேற்றார். கூட்டத்தில் பங் கேற்ற மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், பின்னர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட் டத்தை பிளவுபடுத்தும் வகையில் செயல்படுவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
காவல்துறை அனுமதி மறுத்தாலும், வேளாண் சட்டங் களை ரத்து செய்யக் கோரி தஞ் சாவூரில் டிச.29-ம் தேதி பேரணி மற்றும் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். கேரளாவில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்ட அம்மாநில ஆளுநர் அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை இந்திய தேர்தல் பார்வையாளர்கள் குழுவினரிடம் நாங்கள் கொடுத்துள் ளோம். தமிழகத்தில் ஜனநாயகப் பூர்வமாக, நியாயமாக, பணபல மின்றி தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனாவைக் காரணம் காட்டி 80 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தபால் வாக்குமுறை அளிப்பதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த முறையை கைவிட வேண்டும் என்றார்.